தமிழ்நாடு

"நடிகை கவுதமிக்கு பாஜக துணை நிற்கும்" - அண்ணாமலை

Tamil Selvi Selvakumar

திமுகவினர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை, கவுதமி விவகாரத்தில் அவருக்கு பாஜக துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவினர் மீது பிணையில் வெளியே வரமுடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக புகார் தெரிவித்தார். ஆனால், பிரதமர் மற்றும் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் மீது தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். 

பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, நில அபகரிப்பு புகாரில் தனிப்பட்ட முறையிலும், கட்சி சார்பிலும் கவுதமியுடன் துணை நிற்பதாக கூறினார். அதே நேரத்தில், கவுதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். 

பின்னர், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது தேசிய கொடி அவமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாகிஸ்தானை குஷிப்படுத்த தேசிய கொடியை சிலர் அவமானப்படுத்துவதாக விமர்சித்தார்.