சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று முடிவடையும் நிலையில் தமிழகம் புதிய அரசியல் பரபரப்புகளுக்குத் தயாராகி வருகிறது.
திமுக மறுசீரமைப்பால் கிளை அமைப்புகள் தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் வரை சிக்கல்களை எழுப்பி வருகின்றனர். இன்னொரு பக்கம் தவெகவில் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இடைத்தேர்தலில் தவெகவின் பிம்பத்தை உடைப்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் எதிர்காலத்துக்கும் இன்றியமையாததாகும்.
இதற்காக இரண்டு கட்சிகளும் இணைந்து முயற்சிக்கக்கூடும் எனப் பேச்சு எழுந்துள்ளது. இரண்டு தொகுதிகளையும் ஏற்கெனவே அதிமுக வென்றிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு களம் சற்று மாற்றம் கண்டுள்ளது.
அரசியல் ரீதியாக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் மீது விமர்சனங்கள் அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் மின்தடை, மின் கட்டணம் ஆகியவற்றைத் தாண்டி குறிப்பிடத்தக்க அளவில் அதிருப்தி எழவில்லை. அத்துடன், டாஸ்மாக் மூடல் மற்றும் விஜய்யின் முதலமைச்சர் என்ற பிம்பம் ஆகியவை ஆளும் கட்சியின் செல்வாக்கை வளர்த்திருக்கின்றன.
தவெக இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதால் அதிமுகவுக்கு வழிவிட்டு தேர்தலைப் புறக்கணிக்கும் யுத்தியை கையில் எடுக்க தலைமை ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நீண்ட கால நோக்கில் இது நல்ல திட்டமாக பார்க்கப்பட்டாலும், கட்சியினரை இது அதிருப்திக்கு உள்ளாக்கும். குறிப்பாக இடைத்தேர்தலில் சீட் வாங்க காய் நகர்த்தி வந்த பனையூர் பாபு உள்ளிட்ட உடன்பிறப்புகள் அப்சட்டில் இருக்கின்றனர்.
தலைமையின் இந்த முடிவுக்கு மேல் மட்டத்திலேயே சிலர் மறுப்பு தெரிவித்து வருவதனால் மறுபரிசீலனை நடக்கலாம் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் உடன்பிறப்புகள்.
இடைத்தேர்தலை கைப்பற்றுவதன் மூலம் கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்புக்களை கட்டுப்படுத்த முடியும் என்பதனால் 200 விழுக்காடு உழைப்பை செலுத்த தயாராகி வருகிறார் எடப்பாடியார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்