தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று நான்காவது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுய உரிமையை உறுதி செய்யும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக மார்க்கண்டேயன் தெரிவித்தார்.
மேலும், தனது தகவலின்படி, தற்போதைய அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 213 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலான வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. மீது பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதாகவும், கோவில்பட்டியில் பள்ளி மாணவி தொடர்பான பாலியல் புகாரும் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற சம்பவங்களில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகவும் மார்க்கண்டேயன் கூறினார். தற்போது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் நிற்கும் நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் விமர்சித்தார்.
இதுபோன்ற விவகாரங்களில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சி நிர்வாகிகளாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தன்னை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆதாரங்களை வழங்கியுள்ளதாகவும் மார்க்கண்டேயன் தெரிவித்தார். “அந்தப் பெண்ணின் கண்ணீர் திவலைகள் இந்த ஆட்சியை கரைக்கும்” என அவர் கூறினார்.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்கு மார்க்கண்டேயன் “நோ கமெண்ட்ஸ்” என பதிலளித்தார். திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மார்க்கண்டேயன், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட வேண்டியதில்லை” என விமர்சித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்