தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி உண்ணாவிரதம்!!

Malaimurasu Seithigal TV

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வினை 3ம் முறையாக எதிர்கொள்ளவிருந்த ஜெகதீஷன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், துக்கம் தாளாமல் தந்தை செல்வசேகரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அரசியல் வட்டங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி, நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பினர்.

இந்நிலையில், நீட் தேர்விற்கு எதிராக திமுகவின் மாணவரணி, இளைஞரணி மற்றும் மருத்துவ அணி இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்," மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் – இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில், கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.