tvk-vijay-MAANADU 
தமிழ்நாடு

மாநாட்டிற்கு வரவேண்டாம்!! “கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு விஜய் அறிவுறுத்தல்.."

உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள்....

Saleth stephi graph

2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா, பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என தமிழக வெற்றி கழகம் நல்ல ஒரு பப்ளிசிட்டி யோடே களம் காண உள்ளது.

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல  காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.

அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முழுமூச்சாக  தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்,  தவெக சார்பில் மதுரையில் மிகப்பெரிய 2 -வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்டு 21 ஆம் தேதி  நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட  தொண்டர்கள் கலந்துகொள்ள இருப்பதால், 5 ஏக்கர் அளவுக்கு கோட்டை வடிவில் மேடை அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன, இந்த வேலைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்பார்வை செய்து வருகிறார்.

இந்நிலையில் தவெக தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் கர்ப்பிணிகள், குழந்தைகள் மாநாட்டுக்கு வர வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது.மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன.

1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள், இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.

தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். 

உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்