தமிழ்நாடு

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு! உங்கள் பெயர் இருக்கிறதா? மொபைலிலேயே சரிபார்ப்பது எப்படி?

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 11.12.2026 வரை விண்ணப்பிக்கலாம்...

Muthu Lakshmi

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் - 2027 ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

முன்னதாக வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன் திமுக சார்பில் SIR நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் நீக்கப்பட்ட 11 லட்சம் வாக்களர்களின் விவரங்களை தற்போது வரை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைபெறும் வாக்களர் பட்டியல் தொடர்பான இரண்டாவது கூட்டத்தில் தவெக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற கூடத்திலும் தவெக கட்சி சார்பில் யாரும் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் SIR நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக சார்பில் இந்த வரைவு வாக்களர் பட்டியல் SIR அடிப்படையில் வெளியிடப்படுகிறது என்றால் இந்த பட்டியலை மாவட்ட தேர்தல் ஆணையர் வெளியிடும் போது SIR எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் இந்த பட்டியலை பெற்றுக்கொண்டால் SIR நடவடிக்கையை ஏற்றுகொண்டதாக அர்த்தம் என வாக்குவாதம் செய்தார். SIR நடவைக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலை பெறாமல் வெளியேறினர்.

சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரப்படி, சென்னையில் மொத்தம் 29,14,908 வாக்காளர்கள் உள்ளனர். SIR க்கு பின் 84 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை ஆண் வாக்காளர்கள் 14,04,968 பேரும், பெண் வாக்காளர்கள் 15,09,040 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 900 பேர் உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் 12,815 பேரும், 18 முதல் 19 வயதிற்குட்பட்ட வாக்காளர்கள் 46,200 பேரும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28,159 பேர், ராணுவ வாக்காளர்கள் 531 பேர் உள்ளனர் என வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,20,852 வாக்காளர்களும், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2,28,139 வாக்காளர்களும் உள்ளனர். 192 வாக்குச்சாவடிகளுடன் குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியும். 314 வாக்குச்சாவடிகளுடன் அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி உள்ளது. 

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. திருத்தங்களுக்கு பிறகு இறுதிப் பட்டியல் ஜனவரி 4, 2027 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 11.12.2026 வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நவம்பர் 21,22,29 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்பட உள்ளது என்றும் ஜனவரி 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு Voter Helpline என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் "Search Your Name in Voter List" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் உங்கள் பெயரை தேடி பார்க்கலாம். உங்கள் வாக்காளர் அட்டையில் உள்ள 10 இலக்க எண்ணையும், மாநிலத்தையும் உள்ளிட்டுத் தேடலாம். வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு, வரும் OTP மூலமும்  சரிபார்க்கலாம். உங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் மற்றும் மாவட்டத்தை உள்ளிட்டு தேடலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.