தமிழ்நாடு

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலத்தை கைவிடுக..!

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வெளியிட்ட அறிவிக்கையினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரீகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருவதாகவும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயிகளை காக்க தங்களின் அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும், வளமான காவிரிப் படுகை விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு காவிரிப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்றும்., விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எண்ணி, ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள மு.க.ஸ்டாலின், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.