தமிழ்நாடு

"ஐஐடி யில் மிக குறைவான அளவில் தான்... மாணவர்களுக்கு போதை பழக்கம் உள்ளது" - ஐ.ஐ.டி இயக்குநர் காம கோடி.

Malaimurasu Seithigal TV

சென்னை கிண்டியில் உள்ள ஐ ஐ டி மெட்ராஸ் வளாகத்தில் மன ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த கருத்தரங்கம் இயக்குநர் காமகோடி தலைமையில்  நடைபெற்றது. இந்த கருத்தரங்கின் போது செய்தியாளர்களை சந்தித்த ஐ ஐ டி இயக்குநர் காம கோடி பேசுகையில், 

"சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலையை தடுக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்கொலைகளை செய்து கொண்டவர்களை பொறுத்தவரை ஐந்தில் மூன்று பேர் படிப்பில் நன்றாக இருந்தவர்கள் தான்" என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், " பொதுவாக தற்கொலைகளுக்கு  மூன்று காரணங்கள் இருக்கலாம், சிறுவயது பிரச்சனை, உடல்நலம், பொருளாதாரப் பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை இதில் எது இருந்தாலும் அதனுடன் சேர்ந்து படிப்பும் அவர்களுக்கு அழுத்தமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் படிப்பில் பின்தங்கும் போது படிப்பிலும் அவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.மதிப்பெண் குறைவதால் மாணவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்களாக ஆவது இல்லை என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்", என அறிவுறுத்தினார். 

மேலும், " கொரோனா தொற்றுக்கு பிறகு அனைத்து மாணவர்கள் சமூக அளவில் கூடுவது குறைந்து விட்டது. அதனை சரி செய்ய முயற்சி செய்கிறோம். அதற்காக பல நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட உள்ளது", என்றும், .

"ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவருக்கும் மன நலம் சார்ந்த சர்வே எடுக்கப்பட்டு வருவதாகவும்,  ஒரு வாரத்தில் 25% பேருக்கு சர்வே எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதன்படி, மொத்தம் உள்ள 12 ஆயிரம் பேரில் 600 பேருக்கு மன அழுத்தம் உள்ளது. அந்த 600 நபர்களை கண்டறிவது தான் சவாலான பணி. அதற்கவே சர்வே எடுக்கப்படுகிறது. இந்த சர்வேவில் இயக்குநர், ஆசிரியர்கள் , மாணவர்கள் என ஐ ஐ டி வளாகத்தில் இருக்கும் அனைவருக்கும் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். 

அதோடு அவர், சென்னை ஐஐடி யில் மாணவர்களுக்கு இடையே, மதிப்பெண், ஜாதி, மதம், மொழி, இனம் என எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்ப்பது இல்லை. பாகுபாடு காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை என்றும் தெரிவித்தார். 

தற்கொலைகள் நடப்பது குறித்து அமைக்கப்பட்டுள்ள திலகவதி தலைமையிலான விசாரணை குழு குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர்

"வெளி அமைப்பினர் இது தொடர்பான விசாரணை நடத்தினால் சரியாக இருக்கும் என்று அடிப்படையில் இந்த விசாரணை குழு செயல்படுகிறது. மாணவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் பிரச்சனைகளை சொல்லலாம் என்றும் தெரிவித்து உள்ளோம். இதே போல் எப்படி ஆராய்ச்சி மாணவர்களை கையாள வேண்டும் என்பது குறித்தும் இந்த குழுவின் ஆய்வு முடிவில் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இந்த விசாரணையில் நிர்வாகம் தலையிடுவதில்லை", என கூறினார். 

தொடர்ந்து, " மாணவர்களிடையே உள்ள போதை பழக்கங்களும் தற்கொலைக்கான காரணங்களாக இருக்கின்றன. முன்பு ஒரு காலத்தில் மிக அதிகமாக இருந்தது, தற்போது அதிகளவில் முயற்சிகள் எடுத்து குறைக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கம் பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு ஏற்படுகிறது. போதை பொருள் பயன்பாட்டை பொருத்தவரை கஞ்சா தான் அதிகம் இருப்பதாக தெரிகிறது. ஐஐடி யில் மிக குறைவான அளவில் தான் மாணவர்களுக்கு போதை பழக்கம் உள்ளது", என்றும் குறிப்பிட்டார். 

மேலும், "மாணவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை மாணவர் தலைவர் வழியாகவோ , புகார் மூலமாகவோ, அல்லது ஆலோசகர் மூலமாகவோ தெரிவிக்கலாம் எப்படி தெரியவந்தாலும் முறையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும். அதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது", எனவும் தெரிவித்தார். 

அதையடுத்து, சமீபத்தில் எதிர்பாராத விதமாக நடந்த சில சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க இயன்ற முயற்சிகளை ஐ ஐ டி நிர்வாகம் சார்பில் எடுத்து வருவதாகவும் கூறினார்.