தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு பிப் 5-ல் இடைத்தேர்தல்

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Jeeva Bharathi

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 20 மாதங்கள் பதவி வகித்த நிலையில் திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு மாதம் மரணமடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அதே ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66 ஆயிரத்து 575 வாக்குகள் வித்தியாத்தில் வீழத்தி வெற்றி பெற்றார். இதையடுத்து தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்ட அவர் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.

இந்நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களின் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார்.

அதில் ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கும் என்றும் அறிவித்தார்.

இதற்கான வேட்புமனுதாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 17 கடைசி நாளாகும்.. மனுவை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேயர் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர்களின் படங்கள், சிலைகள் மூடப்பட்டுள்ளது. 3½ ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.