தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி காரை மறித்து செருப்பை வீசிய அமமுகவினர்!  மெரினாவில் நடந்த சம்பவம்...

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசியதால் மெரினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தி உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வு முடிந்து வீட்டுக்கு புறப்பட எடப்பாடி பழனிசாமி தனது இன்னோவா காரில் நினைவிடத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது காமராஜர் சாலையில் சசிகலா மற்றும் தினகரனை வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்த அமமுகவினர், எடப்பாடி பழனிசாமியின் காரை பார்த்ததும் பாயத் தொடங்கினர். அவர் காரை மறிக்க முயன்றதோடு அடையாளம் தெரியாத ஒருவர் எடப்பாடி பழனிசாமி சென்ற காரின் மீது காலணியை கழற்றி வீசியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் அதிமுகவினர் அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமடைவதற்கு முன்பு மோதலில் ஈடுபட்ட முயன்ற இரு தரப்பினரையும்  காவல்துறையினர் விலக்கி வைத்தனர்.  ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட பிறகே சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அங்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது. சசிகலா, தினகரன் ஆகிய இருவரும் தனித்தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.