செங்கோட்டையன் vs எடப்பாடி பழனிசாமி: ஆவேசமான சபாநாயகர்! 'குதிரை பேர' விவாதத்தில் நடந்தது என்ன? 
தமிழ்நாடு

செங்கோட்டையன் vs எடப்பாடி பழனிசாமி: ஆவேசமான சபாநாயகர்! 'குதிரை பேர' விவாதத்தில் நடந்தது என்ன?

செங்கோட்டையன், "விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆர்வமும். அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" எனப் பேசி அதிமுகவினரை சீண்டினார் எடப்பாடி பழனிசாமி.

மாலை முரசு செய்தி குழு

இன்று சட்டமன்றத்தில் 6 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது பற்றிய விவாதத்தை எழுப்பியது திமுக. இதற்கு தவெக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், விவாதம் சச்சரவாக மாறியது.

திமுக தரப்பில், 6 உறுப்பினர்கள் ஒரு சட்டமன்றக் கூட்டத்தில் கூட கலந்துகொள்ளாமல், வாக்களித்த மக்களின் நம்பிக்கையை வீணாக்கிவிட்டனர் என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவை முன்னவரான செங்கோட்டையன், அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் அந்தந்த தொகுதி மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, தீர்வுகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

Sengottaiyan

இதனை மறுத்துப் பேசிய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, "எந்த அமைச்சர் தொகுதி முழுக்க இருக்கும் மக்களைச் சந்தித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்?"

சட்டமன்ற உறுப்பினர் இருந்தால்தான் எல்லா மக்களையும் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அரசின் கவனத்துக்குக் கொண்டு வர முடியும். பொறுப்பு அமைச்சரால் மனுக்களைப் பரிசீலிக்க முடியுமே தவிர, தொகுதி மக்களைச் சந்தித்து பிரச்சனைகளைக் கேட்டறிய முடியாது. அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர் தேவை" என்றார்.

இதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், "விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆர்வமும். அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார். இது அதிமுகவினரை சீண்டியது.

Edappadi Palanisamy

எடப்பாடி பழனிசாமி, "இது வேறு மாதிரி செல்கிறது" எனப் பேசத் தொடங்கினார். தேர்தலில் வென்ற உறுப்பினர்கள் எப்படி ஒரே நாளில் மனம் மாறி ராஜினாமா கொடுத்தார்கள் என அவர் பேசும்போது, சபாநாயகர் குறுக்கிட்டு, "இந்த விவரங்கள் எல்லாம் வழக்கில் இருக்கிறது. உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேசுங்கள்" என்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற அதிமுக உறுப்பினர்கள் இணைந்து குதிரை பேரம் குறித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அதிமுகவினரின் கூச்சல் நீடித்தது.

இதற்கிடையே பேசிய செங்கோட்டையன், "(எடப்பாடி தொகுதியில்) எங்கள் வேட்பாளர் அருண் வாபஸ் பெற்றாரே, அது குதிரை பேரம் இல்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பழனிசாமி, "அவர் வாபஸ் வாங்கவில்லை. அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவை முன்னவர் இருக்கின்ற கருத்துகளைப் பேச வேண்டும்.

அப்போது எங்களுக்கும் திமுக வேட்பாளருக்கும்தான் போட்டி இருந்தது. இவர்களது வேட்பாளரை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.

ADMK

ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்ற உறுப்பினர் எப்படி உடனே ராஜினாமா செய்து, உடனே வேறு கட்சியில் இணைகிறார்?" என்று கேள்வி எழுப்பினார்.

மீண்டும் சபாநாயகர், வழக்கில் இருக்கும் ஒரு பொருள் குறித்து விவாதிக்க அனுமதி இல்லை என வலியுறுத்தினார். தொடர்ந்து மைக் இல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கும் சபாநாயகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இடையில் திமுகவினரும் எழுந்து நிற்க, அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"உங்களை (எடப்பாடி பழனிசாமி) பேச அனுமதிக்கும் போது பின்னால் அத்தனை பேர் நிற்கிறார்களே, இது என்ன பொதுக்கூட்டமா?" எனக் கோபமாகக் கேள்வி எழுப்பி, இருக்கையில் இருந்து எழுந்தார் சபாநாயகர்.

நடக்கும் விஷயங்களைச் சிரித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகப் பேச வலியுறுத்தினார் சபாநாயகர்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர், "ஒரு கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ராஜினாமா செய்யும்போது, அங்கு பணியாற்றிய கட்சி உறுப்பினர்களின் உழைப்பு வீணாகிறது. இதுகுறித்து வழக்கில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள். உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. வழக்கில் இருக்கின்ற விஷயங்கள் பற்றி விவாதிக்க விதியில் அனுமதி கிடையாது. திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசியதால் விவாதம் வளர்ந்துவிட்டது. அவை முன்னவரும் பேச்சைத் தவிர்த்திருக்கலாம்" என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்