தமிழக அரசியலில் கூட்டணி மற்றும் உட்கட்சி விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு பரபரப்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய விரும்புவதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அவர்களைக் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது ஒரு தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல என்றும், 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி எடுத்த ஒருமனதான முடிவு என்றும் அவர் விளக்கமளித்தார்.
அதிமுகவிற்குத் துரோகம் செய்த காரணத்தினால் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும், எனவே அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் ஈபிஎஸ் ஆணித்தரமாகத் தெரிவித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, "அவர் புதிய கட்சி தொடங்குவது பற்றி அவரிடமே கேளுங்கள்" என்று சுருக்கமாகப் பதிலளித்தார். இதன் மூலம் அதிமுகவின் கதவுகள் ஓபிஎஸ்-க்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கடுமையாகச் சாடினார். மகளிர் மாநாடுகளில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாகப் பேசினாலும், எதார்த்தத்தில் சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொல்லப்படும் அவலம் நீடிப்பதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அன்றாடம் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இதைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக அரசின் ஊழல் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பான விரிவான பட்டியலை ஆளுநரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறையில் 2026-27 நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியிலிருந்து விதிகளை மீறி தற்போதே 2,000 கோடி ரூபாய்க்குச் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ஜனவரி மாதமே விடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இது மிகப்பெரிய சட்ட விதிமீறல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தோல்வி பயம் காரணமாக திமுக அரசு இத்தகைய முறைகேடான டெண்டர்களை விட்டு வருவதாகவும், விதிகளுக்குப் புறம்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். 52 குழுக்களைப் போட்டு மக்களை ஏமாற்றும் வேலையை மட்டுமே இந்த அரசு செய்து வருவதாகச் சாடிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவிற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.