தமிழ்நாடு

ஈரோட்டில் கணக்கில் வராத ரூ 4 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல்...

Tamil Selvi Selvakumar

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி ஆய்வில் கணக்கில் வராத 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தரப்பில் இருந்தும் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்து தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிக்குழுவை அமைத்து தேர்தலுக்கான வியூகத்தை வகுத்து வருகின்றனர்.

கட்சிகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தேர்தல் ஆணையம் ஈரோடு (கி) இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, வீரப்பம் பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் முகமது தாபிக் என்பவரின் காரில் இருந்து 3 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் பகுதியில் நடத்திய சோதனையில், ருத்ர சீனிவாசன் என்பவர் கொண்டு சென்ற ஒரு லட்சம் ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் எதுவும் இல்லையென்பதால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.