தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா? தவெக தலைவர் விஜய் மீது தேர்தல் அதிகாரி புகார்.. ‘உங்களுக்கு ரோட் ஷோ நடத்த அனுமதி கொடுக்கவில்லை’ என்றும் விளக்கம்..

500 பேர்கள் பங்கேற்பதற்கான 5 சவுண்ட் சிஸ்டங்கள் அமைத்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மட்டுமே தேர்தல் அதிகாரிகள் தரப்பில் அனுமதி ..

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி நடிகர் விஜய் உட்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை பெரம்பூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது விஜய்யின் பிரச்சாரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டி தேர்தல் அதிகாரி ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாருக்காக புகார்தாரர் வீடியோ ஆதாரங்களை கொடுத்துள்ளார். புகாரின்படி, தேர்தல் அதிகாரிகள் அனுமதித்த நேரத்திற்கு முன்னதாக ஐந்தாயிரம் பேர் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. விஜய் முறையான அனுமதி பெறாமல் சுமார் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதால், அதிகப்படியான இரைச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சாலை நிகழ்ச்சி ஆம்புலன்ஸின் பாதையை மறித்தது மற்றும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பெரும் இடையூறுகளை உருவாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரோட் ஷோ நடத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு தொல்லைகள் ஏற்படுத்தியது, திட்டமிடப்பட்டிருந்த பிற்பகல் 2 மணி நேரத்திற்கு வெகு முன்னதாக, அதாவது சுமார் 12:15 மணியளவில் பெரம்பூரில் இருந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்து, பிற்பகல் 1:05 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இது நிகழ்ந்தது.

பிரச்சாரத்தின் போது பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி நடிகர் விஜய் மீது கொளத்தூர் தேர்தல் அதிகாரி உதவி கணக்கு அலுவலர் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் உட்பட ஐந்தாயிரம் பேர் மீது சென்னை பெரம்பூர் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 126(2), 189(2), 223 bns மற்றும் 3(A), 3(5) ஆகிய பிரிவினர்களுக்கு நடிகர்  விஜய் உட்பட ஐந்தாயிரம் பேர் மீது சென்னை பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக விஜய் தலைமையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு 500 பேர்கள் பங்கேற்பதற்கான 5 சவுண்ட் சிஸ்டங்கள் அமைத்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மட்டுமே தேர்தல் அதிகாரிகள் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மாறாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ரோட் ஷோ நடத்துவதற்கு தேர்தல் அதிகாரிகள் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மாற்று இடத்தை கோரும் மாறும் வலியுறுத்தி இருந்தது. பின்பு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததை அடுத்து பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.