"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து வழங்கும் "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் 2வது தொகுதியாக பொன்னேரி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு நிலவப்போகும் அரசியல் சூழல் குறித்த தகவல்களும் இங்கே விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் மிக முக்கியமான தனித் தொகுதியான பொன்னேரி, சென்னைக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீனவர்கள், விவசாயிகள் எனப் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை உள்ளடக்கிய ஒரு களமாகத் திகழ்கிறது. இங்குள்ள 2,48,917 வாக்காளர்களில் 51.3% பெண்கள் மற்றும் 45.7% இளைஞர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். குறிப்பாக 18 முதல் 40 வயதுடைய இளைஞர்களின் வாக்குகள் இந்த முறை புதிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போவதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பொறுத்தவரை, ஆதிதிராவிடர்கள் 45%, முதலியார் சமூகத்தினர் 17%, மீனவர்கள் 13% மற்றும் வன்னியர்கள் 7% எனப் பரவலாக உள்ளனர். மீனவச் சமூகம் பாரம்பரியமாக எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வந்தாலும், தற்போது அந்த வாக்குகள் பல்வேறு கட்சிகளிடையே பிரிந்து கிடக்கின்றன. உள்ளூர் பிரச்சனைகளைப் பொறுத்தவரை, அதானி துறைமுக விரிவாக்கத்திற்காகப் பழவேற்காடு ஏரியைச் சுற்றியுள்ள சுமார் 5,000 ஏக்கர் மீனவர் நிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் முயற்சி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் குடிநீர் மாசு, போக்குவரத்து நெரிசல் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கம் போன்றவை தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனைகளாக முன்வைக்கப்படுகின்றன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஆராயும்போது, காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் சுமார் 9,500 வாக்குகள் வித்தியாசத்தில் (சுமார் 3% வாக்குகள்) மட்டுமே வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 125 பூத்துகளில் மிகவும் வலிமையாக (Strong) இருந்தது, அதே சமயம் அதிமுக 84 பூத்துகளில் தனது பலத்தை நிரூபித்திருந்தது. நாம் தமிழர் கட்சி 18 பூத்துகளில் வலுவாக இருந்து சுமார் 20,000 வாக்குகளைப் பெற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் சுமார் 50 முதல் 60 பூத்துகள் மட்டுமே 'ஸ்விங்' (Swing) பூத்துகளாக இருந்தன. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த நிலை தலைகீழாக மாறியது. காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 67,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், தற்போதுள்ள கள நிலவரப்படி திமுகவிற்குச் சாதகமான பூத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்
தற்போதைய பூத் வாரியான தரவுகளின்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக கூட்டணிக்குச் சுமார் 90 முதல் 110 பூத்துகள் பலவீனமான (Weak) இடங்களாக மாறியுள்ளன. அதே வேளையில் அதிமுகவிற்கு 60 முதல் 70 பூத்துகள் பலவீனமான இடங்களாக உள்ளன. தமிழக வெற்றி கழகத்தின் வருகையால் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் பெருமளவு பிரியும் சூழல் உருவாகியுள்ளது. இது திமுகவின் சுமார் 10% வாக்குகளைப் பாதிக்கும் என்று கணிக்கப்படுவதால், 112 ஸ்விங் பூத்துகளில் நிலவும் இழுபறி திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
"மாலை முரசு - கான்ஸிலிடிக்ஸ்" 2026 தேர்தல் கணிப்பின்படி, அதிமுக கூட்டணி 41 முதல் 43 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 35 முதல் 37 சதவீத வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 15 சதவீத வாக்குகளைப் பிடிக்கும் பட்சத்தில், அது நேரடியாக திமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும். குறிப்பாக 45% உள்ள ஆதிதிராவிட மக்களின் வாக்குகள் விஜய்யை நோக்கித் திரும்புவது திமுகவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும், கடந்த முறை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற அதிமுக, இந்த முறை பாமக மற்றும் பாஜகவின் கூடுதல் பலத்துடன் களமிறங்குவதால், பொன்னேரி கோட்டையை மீண்டும் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.