தமிழ்நாடு

”இனி தேவையை அறிந்து டெண்டர் வெளியிட வேண்டும்” - மின்தொடரமைப்புக் கழகம் வலியுறுத்தல்!

Tamil Selvi Selvakumar

தேவையின் அடிப்படையிலேயே மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மின் தொடரமைப்புக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தேவையை அறிந்து டெண்டர் வெளியிட வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்தொடரமைப்புக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஏற்கெனவே இக்கட்டான நிதிநிலையில் உள்ளதாகவும், இங்கு தேவையான அளவு உபகரணங்களை மட்டுமே இருப்பில் வைக்க வேண்டும் என்றும், ஆனால் கடந்த 1-ம் தேதி மேற்கொண்ட ஆய்வில் ரூ.440 கோடி மதிப்பிலான மின்மாற்றி, மின் கோபுரங்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த 6 மாத காலத்துக்கு புதிய உபகரணங்கள் கொள்முதல் செய்ய வேண்டியிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வரும் காலங்களில் குறைந்தளவிலான உபகரணங்களை மட்டுமே இருப்பில் வைக்க வேண்டும் என மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

அதே நேரம், தற்போது ஆய்வின்போது கணக்கிடப்பட்ட அனைத்து உபகரணங்களும் இருக்கிறதா என உறுதி செய்து, தேவையான இடங்களில் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்றும், இருப்பில் உள்ள உபகரணங்களின் அளவையும், தேவையான உபகரணங்கள் குறித்த விவரங்களை அறிந்த பிறகே டெண்டர் வெளியிட வேண்டும் என்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.