தமிழ்நாடு

"திமுக ஆட்சி விரைவில் கவிழும்" எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம்!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி விரைவில் கவிழும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் முறைகேடாக நடைபெற்று வரும் 3 ஆயிரத்து 500 மதுபான பார்கள் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மிசாவை பார்த்ததாக டூப் விடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உண்மையிலேயே மிசாவை பார்ப்பார் என்றார். மேலும், தொட்டுப்பார், சீண்டிப்பார் போன்ற வாய்ச் சவடால்களை முதலமைச்சர் கைவிட வேண்டும் என்ற அவர், திமுக ஆட்சி விரைவில் கவிழும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் ஏதேதோ பேசி வருவதாக குறிப்பிட்ட அவர், அமலாக்கத் துறையினரின் அடுத்த கட்ட நடவடிக்கையின்போது திமுக அமைச்சரவையில் பாதி பேர் காணாமல் போய்விடுவார்கள் என்றார்.