அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். செங்கோட்டையன் விவகாரம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக.,வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை அன்னூர் அருகே பாராட்டு விழா பிப்ரவரி 09ம் தேதி நடத்தப்பட்டது. இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் அதிமுக.,வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் மட்டும் அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். இது பற்றி அவரிடம் காரணம் கேட்டதற்கு, அந்த விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆரின் படங்கள் இல்லாததால் தான் அந்த விழாவை தவிர்த்ததாக தெரிவித்தார்.
எடப்பாடியை தவிர்க்கும் செங்கோட்டையன் :
அதற்கு பிறகு நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளிலில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் செங்கோட்டையன். அதற்கு பிறகும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதற்கிடையில் சமீபத்தில் 2025-2026 ம் ஆண்டு தமிழக பட்ஜெட் நேற்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்பாக அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆனால், சட்டமன்றம் வரை சென்ற செங்கோட்டையன, அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். எம்எல்ஏ.,க்கள் அறைக்கு கூட செல்லாமல், சபாநாயகர் அறையில் சென்று காத்திருந்தார். இன்றும் சட்டசபைக்கு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்த்து விட்டார்.
அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது குறித்தும், சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்தது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, " அது பற்றி அவரிடம் போய் கேளுங்கள். திமுக போல் அதிமுக.,வில் யாரும் அடிமை கிடையாது. நான் யாரையும் எதிர்பார்க்கவும் இல்லை. செங்கோட்டையன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் வெளியே செல்லலாம்" என பதிலளித்தார். ஆனால் இது குறித்து செங்கோட்டையனிடம் கேட்ட போது, தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை என கூறி சென்றார்.
தர்மயுத்தம் துவங்குவாரா?
உண்மையில் செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் என்ன பிரச்சனை? எதனால் அதிமுக., கட்சியின் செயல்பாடுகளில் இருந்து செங்கோட்டையன் விலகி இருக்கிறார்? என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை கூட செங்கோட்டையன் தவிர்த்து வருவதால், அடுத்த ஓபிஎஸ்., ஆக உருவெடுக்கிறாரா செங்கோட்டையன்? இவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தர்மயுத்தம் துவங்குவாரா? செங்கோட்டையன் தொடர்ந்து அதிமுக.,விலேயே நீடிப்பாரா அல்லது கட்சியில் இருந்து விலகுவாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இது தான் காரணமோ!!
அதை விட முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமியை, செங்கோட்டையன் தவிர்ப்பதற்கு பின்னால் வேறு யாராவது ஒருவரின் தலையீடு உள்ளதா என்பது தான் முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது. அதே சமயம், எடப்பாடி பழனிச்சாமி- செங்கோட்டையன் விவகாரத்தால் கொங்கு மண்டலத்தில் அதிமுக.,வின் நிலை என்ன ஆகும் என்ற குழப்பமும் எழுந்துள்ளது. 1970களில் இருந்து கொங்கு மண்டலத்தில் அதிமுக.,வின் ஓட்டு வங்கி அதிகரிக்க காரணமாக இருந்தவர் செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் இருந்து எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் முக்கிய இலாக்காக்களின் அமைச்சராக பதவி வகித்தவரும் செங்கோட்டையன் தான். ஆனால் கொங்கு மண்டலத்தில் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதையும், அத்திக் கடவு அவினாசி திட்டத்திற்காக பாராட்டு விழா நடத்தியதையும் செங்கோட்டையனால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொங்கு மண்டலத்தில் அதிமுக.,வின் நிலை?
யாரையும் எதிர்பார்க்கவில்லை. யார் விரும்பினாலும் போகலாம் என எடப்பாடி பழனிச்சாமி ஓப்பனாக சொல்லி இருப்பதால் கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை எட்டி உள்ளது என்பது தெரிகிறது. அதே போல் அதிமுக.,வில் இருந்து வெளியேறும் முடிவுக்கு செங்கோட்டையன் வந்து விட்டார் என்பதையுமே இது காட்டுகிறது. அப்படி அவர் கட்சியில் இருந்து வெளியேறினால் அது கொங்கு மண்டலத்தில் அதிமுக.,வின் பலத்தை பாதிக்கும் என்றும், செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வுகளின் அடிப்படையிலேயே வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக.,வின் வெற்றி அமையும் என்றும் அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்