தமிழ்நாடு

கர்நாடக அரசை கண்டிக்காத திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்...!

Tamil Selvi Selvakumar

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமாரின் அடாவடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசுக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் கண்டனம் தெரிவிப்பதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்து டி கே சிவகுமார் கடந்த மாதம் 20 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரின் இச்செயல் கடும் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டு, மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.

அதே வேளையில், கர்நாடக துணை முதலமைச்சரின் இந்த அடாவடி நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்காத திமுக அரசுக்கும், அதன் கூட்டணிக் கட்சியினருக்கும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கர்நாடக துணை முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணையைக் கட்டவிடாமல் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 38 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு டெல்லிக்கும் சென்று கர்நாடக அரசின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்காத செயலற்ற திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, தமிழ்நாடு வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அதிமுக அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.