முழுமையான இழப்பீடு வழங்காத நிலையில், விளை நிலங்களை கையகப்படுத்தும் NLC நிறுவனத்தின் முயற்சிக்கு துணை போகும் தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி NLC நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக கடலூரில் விளை நிலங்களில் கால்வாய் அமைக்கும் பணிகள் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், NLC நிர்வாகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, விவசாயிகளையும், பொது மக்களையும் கைவிட்டு விட்டு, NLC நிறுவனத்தின் நிலம் எடுப்பு நடவடிக்கைக்கு காவல்துறை உதவியுடன் துணை போகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு சட்டப்படி சம அளவு இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், விளை நிலங்களில் காலம் காலமாக விவசாயத் தொழில் செய்து வருவோரின் வாழ்வாதாரம் குறித்து விரைந்து முடிவெக்க வேண்டும். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் என்.எல்.சி. நிறுவனம் நிறைவேற்ற வில்லை என, குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது முதலமைச்சரானவுடன் காவல்துறை உதவியுடன் NLC நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார். எதிர்கட்சி தலைவராக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, தற்போது முதலமைச்சராக ஆனவுடன் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுவதாகவும், விமர்சித்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கையான சம அளவு இழப்பீடு, நிரந்தர வேலை மற்றும் வாழ்வாதாரத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நிரந்தரமான முடிவெடுத்து விட்டு நில எடுப்பில் NLC நிர்வாகம் இறங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க || அரசு பேருந்துகள் மீது தாக்குதல்; நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு.. கடலூரில் நடப்பது என்ன?