செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் முதலியார் சமூகத்தை சார்ந்தவர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு விண்ணப்ப படிவங்களை பெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம், செங்குந்தர் பவுண்டேசன், செங்குந்தர் கல்வி கழகம் என பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த என ஏராளமானோர் திரண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர். கிழக்கு தொகுதியில், 80,000 பேர் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு பிறகு, 68,000 பேராக உள்ளனர். இதேபோல் மேற்கு தொகுதியில், 38,000 பேர் உள்ளார்கள்.
இது குறித்து தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் துணைத் தலைவர் நந்தகோபால் கூறுகையில் “ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில், முதலியார் சமூக வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் எங்களது சமுதாய வாக்காளா்கள் அதிகம். ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் சுமாா் 40 சதவீதம் போ் எங்கள் சமுதாய வாக்காளா்கள் உள்ளார்கள். வருகின்ற சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட நாங்கள் வாய்ப்பு கேட்டும், அனைத்துக் கட்சிகளும் எங்களைப் புறக்கணித்து வருகின்றன. எங்களை வாக்களிக்கும் இயந்திரமாக மட்டுமே அவா்கள் பயன்படுத்துகிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட தங்கள் சமூகத்தைச் சோ்ந்தவருக்கு திமுக, அதிமுகவில் வாய்ப்பளிக்கவில்லை எனவும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தென்னிந்திய மகாஜன சங்கம் சாா்பில் 500 போ் போட்டியிடுவா் எனவும் அச்சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
கிழக்கு தொகுதியில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர், வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அ.தி.மு.க.,வில் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர், தி.மு.க.,வும் கூட்டணி கட்சிக்கு தொகுதியை கொடுத்து விட்டது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கப்படவில்லை. அந்த கட்சியாவது எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்கும் என நம்புகிறோம், அதுவும் இல்லை என்றால் இன்னும் கூடுதல் வேட்பாளர்களை பங்கேற்க வைப்போம் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தை சார்ந்த 500 சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். 2025 பிப்ரவரி மாதத்தில் நடந்த ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாா், முதலியாா் சமூகத்தை சோ்ந்தவா். ஆனால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் அவரும் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் இருந்துள்ளார். பின்னர் அவரை கோபிசெட்டிபாளையம் தேர்தல் பணிக்காக பார்வையாளராக நியமித்துள்ளது. அதற்காக அவர் அங்கு சென்றுள்ள நிலையில் இந்த வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
“இதற்கான வேட்புமனுவை எவ்வாறு பூர்த்தி செய்வது, எப்போது மனுதாக்கல் செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் எங்களது சமுதாயத்தை சார்ந்தவர்கள் அதிகம் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு துறைகளில் உள்ளார்கள், அந்தந்த துறை சார்ந்த பிரச்சினைகளையும் தொடர்ந்து கோரிக்கைகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், நாங்கள் வலியுறுத்தும் கோரிக்கையில் மீது உரிய நடவடிக்கையும் எங்களுக்கு கிடைப்பதில்லை என்பதுடன், எங்கள் சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு உரிய அங்கீகாரமும் கிடைப்பதில்லை” என ஆதங்கம் தெரிவித்தார். ஈரோடு மேற்கு தொகுதியில், த.வெ.க., முதலியார் சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இருப்பினும் யாருக்கு ஆதரவு அளிப்பது? என்பது குறித்து முடிவெடுப்போம் என்றார்.
வேட்புமனுவை பெற சென்ற போது போலீசாருக்கும் செங்குந்த மகாஜன சங்க தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில் 50 வேட்புமனுக்கள் மட்டுமே இருந்ததால் அருகில் இருந்த ஈரோடு மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகமான கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து கூடுதல் வேட்புமனுக்கள் கொண்டுவரப்பட்டு அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஈரோடு விவசாய சங்கங்கள், கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை திமுக அளிக்கவில்லை என்றால், ஈரோடு தொகுதிகளில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் விவசாய சங்கங்கள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன் மொடக்குறிச்சியில் 1996 சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாய சங்கங்கள் சாா்பில் 1,033 வேட்பாளா்கள் போட்டியிட்டது தோ்தல் வரலாற்றில் முக்கியமான செய்தியாக இருந்தது. இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதே போன்ற சூழல் ஏற்பட்டால் ஈரோடு மாவட்ட தேர்தல் களம் மீண்டும் கவனம் பெறும் நிலை உருவாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.