தமிழ்நாடு

சூடுபிடிக்கும் அரசியல் களம்...களத்தில் இறங்கும் ஈபிஎஸ்...5 நாட்கள் பிரச்சாரம்...!

Tamil Selvi Selvakumar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதுவரை 83 மனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில்,  6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் 77 வேட்புமனுக்கல் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் இறங்கிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், வரும் 24, 25 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் பரப்புரை செய்யவுள்ளார்.

அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய 5 தேதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதேபோல் தென்னரசுவை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், வரும் 13ம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், அதானி குழுமத்திற்கு எதன் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்கியது என கேள்வியெழுப்பினார். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்பதை ஏற்க முடியாது எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.