தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...!

Tamil Selvi Selvakumar

சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் நாள் குறித்து,  சபாநாயகர் அப்பாவு விரைவில் அறிவிப்பார் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்  கே.எஸ். அழகிரி, தி.மு.க.வின் 2 ஆண்டுகால ஆட்சிக்கு கிடைத்த வெற்றியே, ஈரோடு இடைத் தேர்தல் அமோக வெற்றி என்று கூறினார். 

இதனைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க.வில் தெளிவு இல்லை என்றும், தங்கள் கூட்டணியில் தெளிவு இருந்ததால் வெற்றியை ஈட்டியதாகவும் கூறினார். மேலும் பதவி ஏற்பு குறித்து சபாநாயகர் அழைப்பு  விடுப்பார் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை ராயபேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருகை தந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அழகிரியிடம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாழ்த்து பெற்றார்.