தமிழ்நாடு

வருமானவரித் துறையினரின் அதிரடி நடவடிக்கை...மனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர்...உத்தரவிட்ட நீதிமன்றம்!

Tamil Selvi Selvakumar

வருமானவரி துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை:

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது,  வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.

வங்கி கணக்குகளை முடக்கிய அதிகாரிகள்:

இந்த சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

மனு தாக்கல்:

இதையடுத்து வருமானவரி துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வருமானவரி துறையினர் முடக்கிய வங்கி கணக்குகளில் தான் எம்எல்ஏவுக்கான சம்பளத்தையும், அரசு நிதிகளை பெறுவதாகவும், அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை; எனவே, தனது வங்கி கணக்குகளை விடுவிக்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

விசாரணை தள்ளி வைப்பு:

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவுக்கு நாளை மறுநாளைக்குள் பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.