தமிழ்நாடு

"2024 தேர்தலில் விஜய் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்" ரசிகர்கள் உற்சாகம்!

Malaimurasu Seithigal TV

2024 தேர்தலின்போது நடிகர் விஜய் வழிகாட்டுதல்படி செயல்படுவோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அண்மையில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என நடிகர் விஜய் அண்மையில் அறிவித்தார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆயிரத்து 500 மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், முதல் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் நடிகர் விஜயின் இல்லத்திற்கு இன்று காலை வருகை தந்தனர். இதேபோல், நடிகர் விஜயை நேரில் பார்ப்பதற்காக வருகை தந்த ரசிகர்கள் விஜய் வீட்டின் முன்பு நின்று புகைப் படங்கள் எடுத்துக் கொண்டனர். 

விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த கல்வி விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட சுமார் 6 ஆயிரம் பேருக்கு பரிமாறுவதற்காக இனிப்புகள், அடை, பாயாசம் மற்றும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்புடன் கூடிய 15 வகையான சைவ உணவு தயாரிக்கப்பட்டது. இன்று அமாவாசை சனிக்கிழமை என்பதால் சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 3 மணி முதல் 150-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விழாவுக்கு வருகை தந்த மாணவ - மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றொருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அனைவரும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் அமர வைக்கப்பட்டனர். 

அப்போது நமது செய்தியாளரிடம் பேசிய மாணவர்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், நடிகர் விஜயின் இந்த புதிய முயற்சி, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மாணவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர். 

நடிகர் விஜய்-ன் இந்த செயல் பெருமைபடக்கூடிய ஒன்று என்றும், இந்தியாவில் யாரும் செய்யாத ஒன்றை விஜய் தற்போது செய்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு நோட்டு - புத்தகங்கள் மற்றும் உணவு வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், 2024 தேர்தலின்போது நடிகர் விஜய் வழிகாட்டுதல்படி செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.