தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த மாற்றம்...தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள்!

Tamil Selvi Selvakumar

பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை சேர்க்க வலியுறுத்தி  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.

பொங்கல் பரிசு:

தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசியும், சர்க்கரையும், 1000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்குவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. பொங்கல் பரிசில் கரும்பு இல்லாதது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கண்டனம் தெரிவித்து வந்தனர்.

விவசாயிகள் முற்றுகை போராட்டம்:

இதனைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செங்கரும்புடன் அமர்ந்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் செங்கரும்புடன்  இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி  விவசாயிகள் முழக்கமிட்டனர்.

ஊர்வலமாக வந்து மனு அளித்த விவசாயிகள்:

இதேபோல் ஊத்தங்கரையில் கரும்பு விவசாயிகள் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ளூர் கரும்பை கொள்முதல் செய்ய கோரி ஊர்வலமாக வந்து வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். தமிழக அரசை நம்பி ஊத்தங்கரை வட்டாரத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிட்ட நிலையில் ,பொங்கல் பரிசில் கரும்புகளை கொள்முதல் செய்ய அரசு அறிவிப்பு வெளியிடாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்:

இதனிடையே  பொங்கல் விழாவிற்கு கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்காமல் தமிழக கரும்பு விவசாயிகளை தமிழக அரசு ஏமாற்றி விட்டதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் கையில் கரும்புடன் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வட மாநிலங்களில் கொள்முதல் செய்யும் சீனி உள்ளிட்ட பொருட்களை நிறுத்திவிட்டு தமிழகத்திலேயே ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்  என பாஜகவினர் வலியுறுத்தினர்.

தேங்காய், கரும்பு ஏந்தி போராட்டம்:

இதேபோல் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புடன் கரும்பு, தேங்காய் உள்ளிட்டவற்றை வழங்கக் கோரி கையில் தேங்காய், கரும்பு ஏந்தி மதுரையில்  பாஜவினர் நூதன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகரில் பாஜக விவசாயப் பிரிவு  சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 
அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.