தூத்துக்குடி | வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்று எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை கிராம உதவியாளராக தமிழகத்திலேயே முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை ஸ்ருதி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் இ.ஆ.ப., இன்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு பொங்கல் பானையில் அரிசியிட்டு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து துறை சார்ந்த மகளிர் அலுவலர்கள் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பெருக்குடன் கூறி பொங்கலிட்டனர்.
இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க | ” நான் மத வாதத்துக்கு தான் எதிரி” கோயில்கள் திருப்பணிக்கு நிதி கொடுத்தபின் முதலமைச்சர் பேச்சு