தற்போது, வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து கனமழையாக இருக்கிறது. குறிப்பாக கரையோர பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மக்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அஜாக்ஸ் , திருவொற்றியூர்
மழை நீரால் ரயில்வே சுரங்கப்பாதை சூழப்பட்டுள்ளது. அஜாக்ஸ் ரயில் தண்டவாளத்தை மக்கள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பயணத்தால், விபத்து ஏற்படும் அபாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சுரங்கப்பாதையில் உள்ள நீரை வெளியேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆவடி , திருவள்ளூர்
பசுமை பூங்கா அமைந்துள்ள ஆவடி பருத்திப்பட்டு ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 31 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பருத்திப்பட்டு ஏரியில் படகு சவாரி அமைக்கப்பட்டுள்ளது. ஆவடியில் 17 செ.மீ.மழை பதிவாகியுள்ள நிலையில் பருத்திப்பட்டு ஏரி நிரம்பியது - கால்வாய் மூலம் உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
கால்வாயைத் தாண்டி தெருக்களில் பாயும் மழை நீரால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.தொடர் கனமழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியபடியுள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இதனால் அவதியடைந்துள்ளனர்.