தமிழ்நாடு

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ராஜினாமா செய்யும் வரை அதிமுகவின் நிலைமை ICU வில் தான் - அதிமுக முன்னாள் நிர்வாகி விமர்சனம்

Tamil Selvi Selvakumar

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்தால் மட்டுமே, ஐ.சி.யூவில் இருக்கும் அதிமுக வெளியே வரும் என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள், இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில், ஜெயலலிதா சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு, அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் வரவில்லை என்றாலும், அரசு சார்பில் விழா எடுத்ததற்கு முதலமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக இயக்கம் அழிவுப்பாதையில் போய்க் கொண்டிருப்பதாகவும், சசிகலாவிடம் பிச்சை எடுத்து முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, தற்பொழுது அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விட்டதாகவும் விமர்சித்தார்.

மேலும், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்தால் மட்டுமே, ஐ.சி.யூவில் இருக்கும் அதிமுக வெளியே வரும் என்றும் தெரிவித்தார்.