தமிழ்நாடு

விளையாட்டுத் துறைக்கு எம்.ஜி.ஆர். எதுவும் செய்யவில்லையா? இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம், எம்.ஜி.ஆர். மீது, இயக்குநர் பா.ரஞ்சித் புழுதி வாரித் தூற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல சார்பட்டா பரம்பரை படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாபிடியாய் கைக்கொண்டவர் எம்ஜிஆர் என்றும், அவர் படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகி இருப்பதாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். 

1980ஆம் ஆண்டு முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் எம்ஜிஆர் எனக் கூறியுள்ள ஜெயக்குமார், அந்த அளவிற்கு குத்து சண்டை மீது காதல் கொண்டிருந்தார் எம்ஜிஆர் என தெரிவித்துள்ளார்.ஆனால் சார்பட்டா திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்.ஜி.ஆர் அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். 

ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ? என்று வினவியுள்ளார்.எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை படத்தில் தவறாக சித்தரித்து இருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.