தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை ...4.87 கிலோ தங்கம், 23 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 4.87 கிலோ தங்கம், மற்றும் 23 லட்ச ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய புதுக்கோட்டை விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 150-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 6 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சென்னையில் கீழ்பாக்கம், தி.நகர், பெசன்ட் நகர், நந்தனம், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், ஆயிரம் விளக்கு உள்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கீழ்பாக்கம் ரெம்ஸ் தெருவில் உள்ள வீட்டில் டி.எஸ்.பி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் மகள்களுடன் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 50 இடங்களில் நடைபெற்ற சோதனையின் முடிவில் 23 லட்சத்து 85 ஆயிரத்து 700 ரூபாய் பணம், 4,870 கிராம் தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், சொத்துப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய 19 ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.