தமிழ்நாடு

ஜி ஸ்கொயர்... 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை...!! 

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த 12 ஆண்டுகளாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இந்த நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு  சொந்தமானது என்றும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.  

இந்த நிலையில்  ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், சபரீசனின் நண்பர்கள் மற்றும்  ஜி ஸ்கொயர் நிறுவன ஊழியர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகபடியான நிலங்களை விற்பனை செய்து பல  கோடி சம்பாதித்து, வருவாயை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்நிறுவனம் செய்த மூன்று வருடங்களுக்கான பத்திரப் பதிவுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.