ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே கடந்த 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் வளர்த்து வந்த ஆட்டை பட்டப்பகலில் திருடமுயன்றுள்ளார். இதனை பார்த்த விவசாயி நாகராஜ் சத்தம் போடா.. சத்தம் கேட்ட அக்கம்பத்தினர் ஆடு திருட முயன்றவர்களை விரட்டி பிடித்தனர். அதில் ஒருவர் மட்டும் பிடிபட்டு மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகேஷ் ஆடு திருடிய நபரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் மத்தியில் அந்த நபரின் உயிர்நாடியான முக்கிய பகுதியில் எட்டி உதைத்துள்ளார்.
இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் வேளையில் ஆடு திருடிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தாமல் பொதுமக்கள் மத்தியில் இது போன்ற செயலில் ஈடுபட்ட புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகேஷ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.