தமிழ்நாடு

பத்திரிகையாளர்களுக்கு ஓர் நற்செய்தி! ஓய்வூதியத்தை உயர்த்திய முதலமைச்சர்..

அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ்..

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் மக்களோடு ஒன்றாக பயணித்து, அரசிற்கும் மக்களுக்குமான ஒரு பாலமாக விளங்கிவருகின்றனர். மேலும், இவர்கள் பெருந்தொற்று காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களோடு நின்று ஒன்றாக பயணித்து உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய பத்திரிகையாளர்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தித்தர ஆணைப்பிறப்பித்துள்ளார்.

பத்திரிகையாளர் சங்கத்தினர் முன்வைத்த முக்கியமான கோரிக்கையான ஓய்வூதிய உயர்வை உடனடியாக அமல்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுவரை ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்கள் பெற்று வந்த மாதாந்திர ஓய்வூதியம் என்பது ரூ. 12,000மாக இருந்த நிலையில், தற்போது ரூ. 15,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குடும்ப ஓய்வூதியம் 6,000 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். அதேபோல, அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் உயர்தர மருத்துவச் சிகிச்சைகளைத் தடையின்றிப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகையாளர்களுக்கு வீடு அல்லது நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், பத்திரிகையாளர்களின் வீடு அல்லது நிலம் வாங்குவதை எளிமைப்படுத்த பத்திரிகையாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் துவக்கி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் முதல்வரை நேரில் சந்தித்து வழங்கிய இந்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் தற்போது இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் ஏனைய கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.