தமிழ்நாடு

அரசு மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை....

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அரசு மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னையைச் சேர்ந்த மருத்துவரான மகேஷ்வரன் என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பின் விவாகரத்தும் ஆனதாகக் கூறப்படுகிறது. மேலும், குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவர் மகேஷ்வரன் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நேற்று மாலை வழக்கம்போல் பணியை முடித்த மருத்துவர் வீட்டிற்கு செல்லாமல், ராயப்பேட்டை ஆர்.கே சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியதாக சொல்லப்படுகிறது. அதனைதொடர்ந்து இன்று காலை வெகுநேரமாகியும் அவர் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த, அவருடைய நண்பர்களாகிய சக மருத்துவர்கள் மகேஷ்வரனின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவரவே, அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியை தொடர்பு கொண்டு மருத்துவர் குறித்து விசாரித்துள்ளனர்.

தனியார் நட்சத்திர விடுதியின் ஊழியரும் மருத்துவர் மகேஷ்வரன் தங்கியிருந்த அறையில் பார்த்துள்ளார். அறை உள்பக்கமாக பூட்டியதை அறிந்த அவர், மாற்று சாவியை வைத்து அறையை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு மகேஷ்வரன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர், இது குறித்து காவல்நிலையத்திற்கு, சக மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மருத்துவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தான் தற்கொலை செய்து கொண்டதற்கு யாரும் காரணமில்லை என மருத்துவர் எழுதி வைத்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார், மன உளைச்சலா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.