தமிழ்நாடு

இப்படி செய்த இ-சேவை ஒப்பந்த ஊழியர்கள்!!

கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்காக 2.25 லட்சம் ரூபாயை, அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஒப்பந்த ஊழியர்கள் வழங்கி உள்ளனர்.

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், அதன் வீரியத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் நடிகர்கள், பல்வேறு அமைப்புகள் உள்ளிட்டவை முதல்வர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இதனிடையே அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஒப்பந்த ஊழியர்கள் 2.25 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளனர். முதல்வருக்கு சேவை மைய ஒப்பந்த ஊழியர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில், அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்கள், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன என்றும், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அந்த மையங்களில் பணியாற்றி வருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்று இரண்டாம் அலையில் தமிழக அரசுக்கு உதவும் எண்ணத்தில், தங்களின் ஒருநாள் ஊதியமான 2.25 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு வழங்குகிறோம், அரசு விரும்பினால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.