விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை தமிழக போக்குவரத்து துறை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்றும், ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.