தமிழ்நாடு

கிரேன் விபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் உயிரிழப்பு; உடலை மீட்க அரசிடம் கோரிக்கை!

Tamil Selvi Selvakumar

மகாராஷ்டிராவில் கிரேன் விபத்தில் உயிரிழந்த நபரின் உடலை தமிழ்நாடு கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கிருஷ்ணகிரி விஐபி நகரைச் சேர்ந்த இளங்கோவின் மகன் சந்தோஷ்குமார் என்பவர், இன்ஜினியரிங் படித்துவிட்டு வி எஸ் எல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்றையதினம் ஏற்பட்ட திடீர் விபத்தில் கிரேன் விழ்ந்து 16 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவராக பணியில் இருந்த சந்தோஷ் குமார் விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். 

பின்னர் சந்தோஷ் விபத்தில் உயிரிழந்த செய்தி, அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடலை காண்பதற்கு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னமும் பிரேத பரிசோதனைகள் செய்யாமல் இருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில் சந்தோஷ் குமாரின் உடலை, விமான மூலம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், ஒருவேளை விமானம் கிடைக்கவில்லை என்றால் சாலை வழியாக உடலை விரைவாக கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.