தமிழ்நாடு

தமிழகத்தில் நீடிக்கும் பதற்ற நிலை...டெல்லி செல்லும் ஆளுநர்...யாரை சந்திக்கிறார் தெரியுமா?

Tamil Selvi Selvakumar

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழல்களுக்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்.

பெட்ரோல் குண்டு வீச்சு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அதிலும் குறிப்பாக, பாஜக நிர்வாகிகள், ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பில் உள்ளவர்களின் வீடுகள், வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் மீது குறி வைத்தே இந்த சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

தமிழக அரசை வலியுறுத்தல்:

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி செல்லும் ஆளுநர்:

அண்ணாமலை அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...