தமிழகத்தில் தொடர்ந்து காவல் துறையினர் மக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட அஜித் குமார் என்ற இளைஞர் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் போலீசால் கைது செய்யப்பட்டு, அடித்தே படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 -க்கும் மேற்பட்ட நபர்கள் காவல் விசாரணையால் மரணித்துள்ளனர்.
இந்த சூழலில் குமரி மாவட்டம் கருங்கல் அருகே போலீசார் விசாரணைக்கு வாலிபரை பிடிக்க சென்ற போலீசார் சூசை மரியாள் என்ற மூதாட்டியை பிடித்து கீழே தள்ளி தாக்கியதில் மூதாட்டி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ் ஆண்டனி இந்திய இராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு திருமணமாகி சந்திரகலா என்ற மனைவியும் இரண்டு ஆண் மகன்களும் உள்ளனர்.
மூத்த மகன் கல்லூரி படிப்பை முடித்து ஓசூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடைய இரண்டாவது மகன் சாகித் ஜெட்லி 20, இவர் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு அரசு பேருந்தில் சென்று வருவது வழக்கம். இவர் கல்லூரிக்கு செல்லும் அதே பேருந்தில் அதே பகுதியை சேர்ந்த சிவ ரம்யா என்ற பெண் ஒருவரும் பயணம் செய்து வந்துள்ளார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். அப்போது அந்த பெண் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவனை காதலிப்பதாக கூறி உள்ளார்.
தொடர்ந்து இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பெண் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது ஆனால் தனது கணவருடன் வாழ தனக்கு விருப்பமில்லை ஆகையால் தன்னை கைவிடக் கூடாது என்று கூறி அழுதபடி பொன்முடி மலைப்பகுதியில் வைத்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை தடுத்த சாகித் ஜெட்லி சிவ ரம்யாவை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து சாகித் ஜெட்லி சென்னைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சிவ ரம்யா சென்னைக்கு சாகித் ஜெட்லியை தேடி சென்றுள்ளார். தொடர்ந்து இருவரும் டெல்லிக்கு சென்று அறை எடுத்து தங்கி இருந்த நிலையில் வெளிநாட்டில் தங்கி இருந்த சிவ ரம்யாவின் கணவர் ஊருக்கு வந்து மனைவி காணமல் போனது குறித்து இரணியல் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு சிவ ரம்யாவை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு அழைத்து உள்ளனர். இதனையடுத்து டெல்லியில் இருந்து ஊருக்கு வந்த சிவ ரம்யா போலீசார் முன்னிலையில் ஆஜராகி தனக்கு தனிமையில் இருக்க வேண்டும் தனது கணவருடன் வாழ பிடிக்க வில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் வழக்கறிஞர் ஒருவருடன் சிவ ரம்யாவை அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து கணவருடன் சென்ற சிவ ரம்யா மறுநாள் இரவு வீட்டில் இருந்து வெளியேறி சாகித் ஜெட்லி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து இருவரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலி சென்ற நிலையில் அங்கு சிவ ரம்யாவை அறை எடுத்து தங்க வைத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு சாகித் ஜெட்லி வந்துள்ளார்.
அதற்கு முன்பே சிவரம்யாவை தேடி வந்த அவரது கணவர் மற்றும் தாயார் சாகித் ஜெட்லியின் வீட்டிற்குள் நுழைந்து பணம் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளனர். தொடர்ந்து திருநெல்வேலியில் தங்கி இருந்த சிவ ரம்யாவும் அங்கிருந்து இரணியல் காவல்நிலையம் வந்து கணவருடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து சாகித் ஜெட்லி தனது சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சிவ ரம்யாவிடம் உள்ளதாகவும் அதனை திரும்ப தரும்படி போஃன் செய்து கேட்டு வந்துள்ளார். இதற்கு சிவ ரம்யாவின் கணவர் உடன்படாமல் தனது மனைவியை சாகித் ஜெட்லி போதை பொருள் கொடுத்து ஏமாற்றி கடத்தி சென்றதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரிலும் இரு தரப்பினரும் ஆஜராகி சாகித் மேல் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து சிவ ரம்யாவின் கணவர் தொந்தரவு கொடுப்பதால் மன உளைச்சலுக்கு ஆளான சாகித் ஜெட்லி சிவ ரம்யா தன்னுடன் இருக்கும் ஒரு சில புகை படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது கணவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் இதே வீடியோக்களை சிவ ரம்யாவின் அண்ணன் மனைவி ஒருவருக்கு அனுப்பி இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் வெளியிட்டு உள்ளார். இதனையடுத்து சிவ ரம்யாவின் கணவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை சாகித் ஜெட்லியை கைது செய்வதற்க்காக வேண்டி நான்கு போலீசார் வீட்டிற்கு வந்து அத்துமீறி நுழைந்து சாகித் ஜெட்லியை கைது செய்ய முயன்றுள்ளனர்.
இதற்கு தாயார் சந்திர காலா மற்றும் மாமியார் சூசை மரியாள் ஆகியோர் எதிர்த்த நிலையில் போலீசார் மூதாட்டியை பிடித்து கீழே தள்ளி விட்டு ஏறி மிதித்துவிட்டு தப்பி ஓடிய சாகித் ஜெட்லியை பிடிக்க ஓடி உள்ளனர். தப்பி ஓடிய சாகித் ஜெட்லி பள்ளத்தில் குதித்து தப்பித்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். போலீசார் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே காவல் துறை இது சம்மந்தமாக வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்யாமல் இருக்கவும் வழக்கிலிருந்து காப்பாற்ற மூதாட்டியை காவலர்கள் தாக்கியதாக புரளியை அந்த குடும்பத்தினர் கிளப்பி விடுவதாக காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.