தமிழ்நாடு

பாலியல் விவகாரம் - ஹரிபத்மனுக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு...!

Tamil Selvi Selvakumar

கலாஷேத்ரா விவகாரத்தில் கைதான நடனப்பள்ளி உதவி ஆசிரியர் ஹரிபத்மனை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ருக்மிணி தேவி கவின் கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. தொடர்ந்து புகாருக்கு உள்ளான உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவிகளுடன், சக மாணவிகளும் இணைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையம், பாலியல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நடன உதவி பேராசிரியர்  ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். 

தொடர்ந்து ஹரிபத்மனிடம் விசாரணை செய்த போலீசார், பின்னர்  சைதாபேட்டை குற்றவியல் நீதிபதி சுப்பிரமணியன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஹரிபத்மனுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹரிபத்மனை சிறையில் அடைத்த போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.