தமிழ்நாடு

பிளாஸ்டிக் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கலாமா?

தமிழ்நாட்டில் மூடப்பட்ட பிளாஸ்டிக் நிறுவனங்களை மீண்டும் இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,  மக்கக்கூடிய பைகளுக்கு பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி நிறுவனமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சோபனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பைகளை மக்கச் செய்வதற்கான உரக்கிடங்குகள் தமிழ்நாட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மக்ககூடிய பைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த பைகளை மக்கச் செய்வதற்கான உரக்கிடங்கை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும்படி அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு  அறிவுறுத்திய நீதிபதிகள், மக்கக்கூடிய பைகளை தயாரிக்க முடியுமென்றால், மூடப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் இயக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும்,  சோதனை முயற்சியாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது மண்டலத்தில் ஆவின் பாலை பாட்டிலில் விற்பது குறித்து நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்த போது, அதுகுறித்து ஆராய்ந்து விளக்கமளிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.