தமிழ்நாடு

"செந்தில் பாலாஜி நடிப்பின் சக்கரவர்த்தி" தம்பிதுரை சாடல்! 

Malaimurasu Seithigal TV

செந்தில் பாலாஜி நடிப்பின் சக்கரவர்த்தியாக திகழ்பவர் என அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை  விமான நிலையத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது, செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் உள்பட பலரிடம் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார் தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இப்போது அமலாக்க துறை மற்றும் வருமான வரி துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்கை பற்றி  முழு விவரங்கள் தெரிந்த பின்னர் தான் கருத்து சொல்ல முடியும் என தெரிவித்தார். 

முதலமைச்சர் முகஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், திமுக ஆட்சியில் யார் முதல்வராக இருக்கிறார் யார் நிழல் முதல்வராக செயல்படுகிறார் என எல்லாருக்கும் தெரியும் என்றும் ஒரு முதல்வர் மற்றொரு முதல்வரை சந்தித்து உள்ளார் என்றும் கூறிய தம்பிதுரை செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

மேலும், இதுபோன்ற பிரச்சனைகள் வரும் போது தார்மீக பொறுப்பு ஏற்று மந்திரி பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வது தான் சிறந்த முறையாகும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. நாடே தற்போது அவரை பற்றி அறிந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும், அரசியலில் இளம் வயதிலேயே இப்படி கேள்விக்குறியாவது நல்லதல்ல. எந்த ஒரு கட்சியும் இப்படிப் பட்டவர்களை ஆதரிப்பதோ முக்கியத்துவம் தருவதோ அந்த கட்சிக்கும் அரசுக்கும் தாழ்வு நிலை ஏற்படும். எனவே ஊழல் செய்பவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மின்சார கட்டணத்தை உயர்த்துவது, சாராயக் கடைகளில் கமிஷன் வாங்குவது, தமிழகமெங்கும் கள்ளச் சாராயம் விற்கப்படுவது, அதனால் பலர் இறந்து போவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பான அமைச்சர் மருத்துவமனையில் படுத்து கொண்டு இருக்கிறார். அவர் நடிப்பின் சக்கரவர்த்தியாக இருப்பவர்.