தமிழ்நாடு

இவர்தான் ரியல் ‘பைசன்’ - நேபாள அணியை வென்ற… விருதுநகர் இளைஞர்! கட்டிடத் தொழிலாளியின் மகன் TO இந்திய கபடி வீரர்!

நிஜ வாழ்க்கையிலும் சாதனை படைத்து ஊருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் விருதுநகரைச் சேர்ந்த இளம் கபடி வீரர் நாகராஜ்

Muthu Lakshmi

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேலதொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி வீரவேல் என்பவரின் மகன் நாகராஜ் (19). பள்ளியில் படிக்கும் போதே கபடி போட்டியில் ஆர்வம் கொண்ட நாகராஜ், வேலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். நாகராஜ் தமிழ்நாடு அணிக்காக 8 முறையும், கேலோ இந்தியா போட்டியில் 2 முறையும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் நேபாளத்தில் நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் விளையாட நாகராஜ் தேர்வாகி உள்ளார். நாகராஜுக்கு பாஸ்போர்ட் இல்லாத நிலையில், அணிக்கு தேர்வான பின் பாஸ்போர்ட் எடுத்து நேபாளம் சென்று இந்திய அணியில் பங்கேற்றார்.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் நடந்த யு-20 சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் பங்கேற்று விளையாடி இன்று சொந்த ஊர் திரும்பிய நகராஜுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன், கபடி வீரர் நாகராஜுக்கு கிரீடம் சூட்டி கொண்டாடினார்கள்.

வெற்றிக்கு பின் சொந்த ஊர் திரும்பிய கபடி வீரர் நாகராஜ் இது குறித்து பேசுகையில்: இந்திய அணி, லீக் போட்டியில் நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகளை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்று வென்றது. இந்திய அணியில் இடம் பிடித்து, வெற்றிக்கு பங்காற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஆதரவாக இருந்த பயிற்சியாளர்கள் ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு நன்றி. இந்திய அணிக்கு தேர்வான போது பாஸ்போர்ட் இல்லாத நிலையில், ஒரே நாளில் பாஸ்போர்ட் வழங்கி உதவியதற்கு நன்றி, என்றார்.

மேலும், என்னைப்போன்ற கபடி வீரர்களை உருவாக்குவதே தனக்கு கனவு என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வெள்ளித்திரையில் கபடி விளையாட்டில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்தவர் 'பைசன்' படத்தின் நாயகன். ஆனால், நிஜ வாழ்க்கையிலும் சாதனை படைத்து ஊருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் விருதுநகரைச் சேர்ந்த இளம் கபடி வீரர் நாகராஜ். கட்டிடத் தொழிலாளியின் மகனான இவர், பல்வேறு தடைகளைக் கடந்து இந்தியாவின் யு-20 கபடி அணியில் இடம்பிடித்ததுடன், சர்வதேசப் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்துள்ளார். கபடி வீரர் நாகராஜ் விருதுநகருக்கு மட்டுமின்றி தமிழத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்