தமிழ்நாடு

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு...திருமாவளவன் ஆவேசம்!

Tamil Selvi Selvakumar

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகள் மேற்கொள்ளலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சென்ற திருமாவளவன்:

திருநெல்வேலியில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். 

தமிழ்நாடு என்பது தான் சரி:

பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குதர்க்கமான கருத்துகளை  பேசி வருவதாக குற்றம் சாட்டினார். தமிழகம் தான் சரியான சொல், தமிழ்நாடு என்பது தவறானது என்ற ஆளுநர் ஆர்.என் ரவியின் கருத்துக்கு பதிலளித்த திருமாவளவன், தமிழ்நாடு என்றாலும், தமிழகம் என்றாலும் ஒன்று தான். ஆனால், தமிழ்நாடு தவறான சொல் என்ற தோற்றத்தை ஆளுநர் உருவாக்குகிறார். வேண்டுமென்றே பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கு எதிரான கருத்து தோற்றத்தை உருவாக்க விரும்புவதாக குற்றம்சாட்டினார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யலாம்:

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் என்பவர் ஒரு அரசியல் அமைப்பு சட்ட பிரதிநிதி, ஆனால் தமிழக ஆளுநர் அதற்கு எதிராகவே செயல்படுகிறார். ஆகவே, இவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ் பணிகள் மேற்கொள்ளலாம் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.