தமிழ்நாடு

26 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 26 கோடி ரூபாய் மதிப்பில் 9 ஆயிரத்து 621 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்:

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, 252 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான 74 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், 32 கோடியே 94 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 57 புதிய பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து, 36 ஆயிரத்து 691 பயனாளிகளுக்கு 78 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

பெருமிதம் தெரிவித்த ஸ்டாலின்:

பின்னர் பேசிய ஸ்டாலின், தண்டவாளத்தில் தலை வைத்து தமிழை வளர்த்தவர் கலைஞர் கருணாநிதி என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2007-ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை புதிதாக உருவாக்கியவர் கருணாநிதி என்றும் கூறினார். 

அரசு விழாவாக கொண்டாடப்படும்:

தொடர்ந்து பேசிய அவர், வாரணவாசி கிராமத்தில் 120 நிலப்பகுதிகளை பவர் பாதுகாப்பு நிலமாக மாற்ற தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய ஸ்டாலின், அகழ்வாராய்ச்சிக்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்ற முதலமைச்சர், ராஜராஜ சோழனுக்கு எப்படி சதய விழாவோ அதுபோல், ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார். 

தமிழகத்தை உயர்த்த இலக்கு நிர்ணயம்:

மேலும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதம் அடைவதை தடுக்கும் வகையில் அரியலூரில் சிமெண்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதலமைச்சர், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

சட்டம் ஒழுங்கை கெடுக்க சதி:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க ஒருசிலர் சதி செய்வதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமர்சனங்களை வரவேற்பவன் நான், ஆனால் விஷமத்தனம் கூடாது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் சீரழிக்கப்பட்ட தமிழகத்தை திமுக அரசு மீட்டெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.