தமிழ்நாடு

”காவிரி விஷயத்தில் முறையான நடவடிக்கை எடுக்காமல் எனக்கு வரலாறு தெரியாது என்கிறார் “ - துரைமுருகனுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.

Malaimurasu Seithigal TV

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓபிஎஸ் காவிரி விசயத்தில் தமிழக மக்களுக்கு உரிய தண்ணீரை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி விட்டு தனக்கு காவிரி பற்றிய வரலாறு தெரியாமல் பேசுவதாக கூறிய அமைச்சர் துரைமுருமுகனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக செய்தியார்களிடம் தெரிவித்தார்.

சென்னை செல்வதற்காக மதுரை  விமான நிலையம்  வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரவீந்திரநாத் குமார் தீர்ப்பு தொடர்பான கேள்விக்கு இதில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது
 இதைப்பற்றி நான் என்ன கருத்து சொல்வது?  என பதிலளித்தார். 

அதனைத்தொடர்ந்து,  பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிதியை திமுக அரசு மகளிர் உரிமை தொகைக்கு வழங்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,...

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமை தொகைக்கு கொடுப்பதாக இருந்தால் அது சட்டப்படியான குற்றமாகும் என பதிலளித்தார். 

தொடர்ந்து பேசுகையில்,.. “ தஞ்சையில் சம்பா சாகுபடி பயிர்கள் கருகி உள்ளது. ஜூன், ஜூலை மாதத்தில் வரவேண்டிய .காவிரி நீரை பெற்றுத்தர  அரசு ஏற்பாடு செய்யவில்லை இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும். இதேபோல் என்எல்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அதனையும் தமிழக அரசு இழப்பீடு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”,  என்று தெரிவித்தார்.

மேலும்,  ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி அப்போதைய திமுக அரசிடம் உரியநீரை பெற வலியுறுத்திய நிலையில் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்காததால் அப்போதைய  கர்நாடக அரசு தங்களுக்கு நீர் போதவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
 
ஆனால் அந்த வழக்கையும் திமுக அரசு உரிய முறையில் போராடி வெற்றி பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் செய்யவில்லை. அதற்கான முயற்சியில் அப்போது திமுக கூட்டணியில் இருந்த மன்மோகன்சிங் அரசும்  உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரே காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டு தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வருவதற்கான ஆணையை பெற்றுத் தந்தார்.  

இதையெல்லாம் மறைத்து விட்டு தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எனக்கு வரலாறு தெரியவில்லை எனவும் வரலாறு தெரியாமல் ஓபிஎஸ் பேசுகிறார் எனக்கூறி வருகிறார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”,  என கூறிவிட்டு மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.