செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி பேராசிரியர்கள் இரண்டு பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்த குழு அளித்த அறிக்கையில் காவல்நிலையம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஐடி போரசிரியர் அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து இருப்பதாகவும் இதே போன்று தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் அதனை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு இரண்டு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.
முன்னதாக கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சுதர்சனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று புத்தகத்தில் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும்தான் இருக்கும் என வேதனை தெரிவித்தது.
மனுதாரர் கூறிய சம்மந்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைக்கப்பட்டது..