இன்றுடன் சட்டப்பேரவை நிறைவடையும் நிலையில், 8 மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், இன்று காலை தொடங்கிய சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய் மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிய கருத்துக்களை நீக்கவேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு முன்மொழிந்தார். ஆனால், சபாநாயகரோ, முதல்வர் பேசியதை "நீக்க அவசியமில்லை" என்று கூறியதோடு, அமலாக்கத் துறை குற்றச்சாட்டை தான் முதல்வர் விஜய் சொல்லியுள்ளார்; தீர்ப்பு பற்றி பேசவில்லை...நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, தவறு என்றோ முதல்வர் பேசவில்லை எனவும் முதல்வர் பேசியதை நீக்க அவசியமில்லை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வையில் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கொறடா எ.வ.வேலு, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பது மரபுக்கு எதிரானது என தெரிவித்தார். ஆதாரமில்லாமல் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் பேசிய குறிப்பிட்ட பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை" என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதோடு, சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபடத்தொடங்கினர். மேலும், முதல்வர் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், சபாநாயகரை நோக்கி நெருக்கமாக சென்றார் திமுக-எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன். தன்னை நோக்கி நெருங்கி வந்த வசந்தம் கார்த்திகேயனை பார்த்து சபாநாயகர் 'Don't come here.. Get out' என்று உச்சக்கட்ட கோபத்தில் எச்சரித்தார்.
தொடர் அமளி மற்றும் நிலைமை கட்டுக்கடங்காத காரணத்தால் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து சில திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் பேசுபொருளாகி வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்