தமிழ்நாடு

விடுமுறைநாளில் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். ஆயில் மசாஜ் செய்தும், அருவிகளில் குளித்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tamil Selvi Selvakumar

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள அருவிகளில் குளிக்கவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம். இந்நிலையில், விடுமுறை நாளான இன்று அதிகாலை முதல் ஏராளமானோர் ஒகேனக்கலுக்கு வருகை தந்தனர். 

பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள், ஆயில் மசாஜ் செய்துக் கொண்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பி வளையம் வரை ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் அவர்கள் உற்சாக குளியல் போட்டனர்.  இதேபோல், புதிதாக பிடிக்கப்பட்ட ஆற்று மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் ஆகியவற்றை அவர்கள் ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

இங்கு பரிசல் ஓட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில், சின்னாறு படுகையிலும் பரிசல்களை இயக்க அனுமதிக்கக்கோரி கடந்த சில தினங்களாக பரிசல் ஓட்டிகள், பரிசல்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஒகேனக்கலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாததால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிச் செல்கின்றனர்.